சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைந்துள்ள திராட்சைகள் கொடியிலே அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.
அதே போல் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் விதையில்லா பச்சை திராட்சையும் விளைந்து வருகிறது.
நீரும், குளிர்ச்சியான பருவநிலையும் நிலவுவதால் இந்தியாவிலேயே கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில்தான் ஆண்டு முழுவதும் திராட்சை விளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது.
இங்கு விளையும் திராட்சைகள் சென்னை, சேலம், திருச்சி, கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.
இதனால் விளைந்த திராட்சைகளை விற்பனைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தோட்டங்களிலே இவை கொத்து கொத்தாக தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில்,ஒவ்வொரு 4 மாதத்திற்கும் ஒருமுறை மகசூலுக்கு வரும். தற்போது இவற்றை யாரும் கொள்முதல் செய்யாததால் இப்பகுதியில் சுமார் ரூ.4கோடி மதிப்பிலான திராட்சைகள் கொடியிலேயே அழுகும் நிலை உள்ளது.
எனவே இவற்றை உழவர்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அல்லது இங்குள்ள தனியார் ஒயின் தொழிற்சாலை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.