சர்க்கரை நோய்க்கான டெனிலிக் லிப்டின் மருந்தை கிளென்மார்க் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது விலை குறைந்த மருந்து என அந்நிறுவனம் கூறியுள்ளது.
சர்க்கரை நோய்க்கு குறைந்த விலையிலான டெனிலிக்லிப்டின் என்ற மருந்தை நாட்டின் பல இடங்களிலும் கிளென் மார்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெனிலிக்லிப்டின் மருந்தை அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கிளென்மார்க் மருந்துகள் நிறுவனத்தின் தலைவர் சுஜேஷ் வாசுதேவன் கூறியதாவது:
இந்தியாவில் 6.51 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில் குழந்தைகள் அல்லாதவர்களில் 24.6 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய்க்கு உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் கைகொடுக்காதபோது, அதிகம் பயன்படுத்தப்படுவது க்லிப்டின் வகை மருந்து. இந்த மருந்தால் பக்க விளைவுகள் குறைவு. ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களில் 19 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள டெனிலிக்லிப்டின் மருந்துக்கு ஒரு நாளுக்கு ரூ.19.90 என ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம்தான் செலவாகும். மற்ற கம்பெனி மருந்துகள் என்றால், ஒரு நாளுக்கு ரூ.45 என ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்திப்பின்போது கிளென்மார்க் நிறுவனத்தின் துணை தலைவர் ஜேசன் டிசோசா உடனிருந்தார்.