தமிழகம்

சிறு,குறு தொழில் நிறுவன மின் ஆளுமை விருதுக்கு செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தமிழ்நாடு மின் ஆளுமை விருதுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மின் ஆளுமை இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கான சேவைகளை ஏற்று நடத்த மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு தமிழ்நாடு மின் ஆளுமை விருதை வழங்கி வருகிறது.

இந்த 2015-16ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மின் ஆளுமை விருதுக்கு பல்வேறு துறைகளில் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு, மக்களுக்கான மின் ஆளுமை சேவைகள் வழங்கும் சிறந்த கைபேசிக்குரிய மென்பொருள் பயன்பாடு, சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான மின் ஆளுமை விருது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரு விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். இவ்விருதுக்கு ஆன்லைன் மூலம் உரிய படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, www.tngea.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT