கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரை நேற்று காலை முதல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கிறதா, அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார்.