கரூர் உழவர் சந்தையில் போதுமான இடவசதி இல்லாததால் உழவர் சந்தைக்கு வெளியே 8 இடங்களில் விவசாயிகள் கடை போட்டு காய்கறிகளை நேற்று விற்பனை செய்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக காய்கறி கடைகளில் போதிய இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்பது, விற்பனை ஆகியவற்றை நேற்று பார்வையிட்ட மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருவள்ளுவர் மைதானத்தில் காய்கறி கடைகள் மார்ச் 28 (இன்று) முதல் செயல்படும். உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட் ஆகிய இடங்களில் காய்கறிகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் திருவள்ளுவர் மைதானம், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில், குளத்துப்பாளையம் சாலை வாரச்சந்தை அருகில், பசுபதிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, காந்திகிராமம் மைதானம், வேலுசாமிபுரம், தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி முன், செங்குந்தபுரம் பிரதான சாலை ஆகிய இடங்களில் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் காய்கறி விற்பனை நடைபெறும் என்றார்.
இதேபோல, வடக்கு மாதவி ரோட்டில் செயல்பட்ட உழவர் சந்தை மூடப்பட்டதையடுத்து, வாரச்சந்தை மைதானத்தில் நேற்று காலை முதல் உழவர் சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டும், காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்லவும் குறியீடுகள் இடப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, புதுக்கோட்டையில் இயங்கி வரும் உழவர் சந்தையில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதால் கூடுதலாக அரசு கலைக் கல்லூரி எதிரில், மன்னர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் பேராங்குளம் அருகே உள்ள தடிகொண்ட அய்யனார் திடலிலும் உழவர் சந்தை நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே அமைக்கப்பட்ட உழவர் சந்தையை நேற்று பார்வையிட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, “அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி மற்றும் விராலிமலை ஆகிய இடங்களில் வழக்கம்போல அதே இடத்தில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. அறந்தாங்கியில் உள்ள தினசரி சந்தை அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உழவர் சந்தைக்கு நேற்று காய்கறி வாங்க வந்தவர்களை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவைத்து, கடைக்கு ஒருவர் என அனுப்பி வைத்து கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.