சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு 500 படுக்கை வசதிகளுடன் செயல்பட தொடங்கியது. 
தமிழகம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் தொடங்கியது

செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 350 படுக்கை வசதிகளுடன் செயல்படத் தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர் மற்றும் டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளனர்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 32 பேர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கரோஜா வைரஸ் அறிகுறிகளுடன் சுமார் 300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க முதலில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு அதிகரிக்கப்பட்டதால், படிப்படியாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை வசதியுடன் கூடிய 30 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரும், மருத்துவமனை டீனுமான நாராயணபாபுவிடம் கேட்டபோது, “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தசிறப்பு சிகிச்சை மையம் தற்போது செயல்படத் தொடங்கியது” என்றார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,421 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகள், தங்களுடைய மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை கரோனா சிறப்பு சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கி யுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT