பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி முக்தி அடைந்தார். பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராஜயோகினி தாதி ஜானகி கடந்த 1916-ம் ஆண்டு இந்தியாவின் வடக்கு மாகாணமான தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தார். 1937-ம் ஆண்டு பிரம்மா குமாரிகள் இயக்கத்தில் இணைந்தார்.
1970-ம் ஆண்டு லண்டன் சென்று ஆன்மிக, கல்வி மற்றும் சமூக பணியாற்றினார். தற்போது, உலகம் முழுவதும் 147 நாடுகளில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 5,400 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக கடந்த 2007-ம் ஆண்டு முதல் ராஜயோகினி தாதி ஜானகி (104) செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அபுமலையில் உள்ள மருத்துவமனையில் ராஜயோகினி தாதி ஜானகி நேற்று அதிகாலை 2 மணியளவில் முக்தியடைந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை 3 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அபுமலையில் உள்ள இயக்கத்தின் உலகளாவிய தலைமையகத்தில் நடைபெற்றது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி சமுதாயத்தில் அக்கறையுடன் சேவை புரிந்தார். மக்களிடம் ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார். பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குவதில் அவரது முயற்சி குறிப்பிடத்தக்கது. ஓம் சாந்தி.
இவ்வாறு, பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சாதி, சமய, இன வேறுபாடின்றி தியானத்தின் மூலம் அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மிக வழியை புகட்டியவர். மக்களிடையே ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வர உழைத்தவர். பெண்களை சக்தி வாய்ந்தவராக ஆக்குவதில் இவருடைய உழைப்பும் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ராஜயோகினி தாதி ஜானகி போற்றப்பட்ட, மதிப்புக்குரிய ஆன்மிகத் தலைவராக இருந்தார். பெண்களுக்கான அதிகாரம், மனித நேயம், உலக அமைதியை நோக்கி பிரம்மா குமாரிகள் இயக்கத்தை வழிநடத்தி வந்தார். அவருடைய தன்னலமற்ற சேவை, தொடர்ந்து அனைவருக்கும் ஊக்கமளித்து அவர்களை வழிகாட்டும்" என்று கூறியுள்ளார்.