கரோனாவால் ஏற்பட்டிருக்கும் மோசமான இந்தக் காலகட்டத்தில் சிரமப்படும் மக்களுக்கு உதவ மனிதாபிமானமுள்ள பல்வேறு மனிதர்கள் அன்றாடமும் முன்வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.டி.மொய்தீன்.
நாகூரில் உள்ள தனக்குச் சொந்தமான ஏ.டி.எம் டவர், ஏ.டி.எம் ஆற்காடு, ஏ.டி.எம் என்கிளேவ் ஆகிய மூன்று குடியிருப்புகளில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் குடித்தனக்காரர்களுக்கு ஆறுதலான செய்தியை அறிவித்துள்ளார் மொய்தீன்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு வாடகை தர வேண்டியதில்லை என்று குடித்தனக்காரர்களுக்கு எழுத்துபூர்வமாக அறிவித்திருக்கிறார். மே மாத வாடகையையும் ஜூன் மாதத்தில் நிலைமை சரியான பிறகு தரலாம் என்றும் சலுகை கொடுத்திருக்கிறார்.
''எங்கள் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அனைவருமே ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்கள்தான். கூலி வேலை மற்றும் மாத ஊதியத்திற்கு வேலை பார்க்கும் அவர்கள் இப்போதுள்ள நிலைமையில் வேலைக்குப் போகாமல், வருமானமின்றி எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவர்களது சிரமத்தில் பங்கேற்கும் விதமாக இரண்டு மாதங்களுக்கு வாடகை வேண்டாம் என்று அறிவித்து விட்டேன்'' என்கிறார் ஏ.டி.மொய்தீன்.