அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு உதவ கட்டுப்பாட்டு அறை எண்ணை அறிவித்தது மதுரை காவல் ஆணையர் அலுவலகம்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்கு மக்கள் குறித்த நேரத்தில் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், பல்வேறு குளறுபடி ஏற்பட்டு வருகிறது.
மக்கள் நேரில் சென்று பொருட்கள் வாங்குதை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக வீட்டிற்கே நேரில் வந்து விநியோகிக்கும் பொருட்களை வாங்கிக் கொள்ள பழகவேண்டும் என, போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்று இன்று திறக்கப்பட்டது. காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இதனை திறந்து வைத்தார்.
அவரது தலைமையில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த அறைக்கு பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களின் பட்டியல், முகவரி விவரத்தை 0452- 2531045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காவல்துறையினர் மூலம் பொருட்களை நேரில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள், மூத்த குடிமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறையில் அலுவலில் இருந்த காவலர் கூறும்போது, "பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வருவதைக் கட்டுப்படுத்த மதுரை மாநகரில் உள்ள மளிகைக் கடைகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால் அவர்களிடம் தொடர்பு எண்ணைப் பெற்று அந்த எண்ணை மளிகைக் கடை முதலாளிகளிடம் கொடுப்போம். அவர்கள் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பட்டியல் பெற்று வீட்டுக்கே பொருட்களைக் கொண்டு சேர்ப்பர். சில நேரங்களில் மிக மிக அவசரமாக மருந்துப் பொருட்கள் ஏதும் கேட்டால் அதனை காவல்துறையினரே சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியகாக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.