தமிழகம்

வறுமையால் கூலி வேலைக்குச் சென்ற ஏழை மாணவருக்கு எம்பிபிஎஸ் படிக்க வழிகாட்டிய தி இந்து

செய்திப்பிரிவு

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தும், வசதியின்மையால் கூலி வேலைக்குச் சென்ற மாணவர் குறித்து ‘தி இந்து’வில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, அவர் எம்பிபிஎஸ் பயில ஏராளமானோர் உதவி வருகின்றனர். இதனால், மருத்துவம் படிக்க நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட் பட்ட சுண்டாங்கிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி(55). தள்ளு வண்டித் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(48). தென்னங் கீற்று முடையும் தொழிலாளி. இவர் களது மகள்கள் ரம்யா பொறியி யலும், தீபா செலிவியருக்கும் படித்துள்ளனர். மகன் தினேஷ்குமார் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.42,000 கடன் வாங்கி, கல்லூரியில் சேர்க்கை கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.

ஆனால், வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர் தினேஷ்குமார் கூலி வேலைக்கு சென்றார். இதுகுறித்து ‘தி இந்து’வில் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, ஏராளமானோர் அந்த மாணவரைத் தொடர்பு கொண்டு, அவருக்கு நிதியுதவி வழங்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தினேஷ்குமார் கூறும்போது, “தி இந்து-வில் செய்தி வெளியானவுடன், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டனர். கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரூ.5,000 திரட்டுவதற்கே சிரமப்பட்ட எனக்கு, இதுவரை சுமார் ரூ.1 லட்சம் கிடைத்துள்ளது. மேலும் பலர் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். புதுக்கோட் டையைச் சேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்தி ரூ.25,000 கொடுத்துள்ளார். அவருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுடன் கிடைத்த தொகையை, நான் கல்வி பயில வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நான் மருத்துவராகும் கனவை ‘தி இந்து’ நனவாக்கியுள்ளது” என்றார்.

முதல்வர் உதவி

இதற்கிடையில், எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் மாணவர் தினேஷ்குமாரின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT