மருத்துவர்கள், போலீஸார் தொடங்கி துப்புரவு பணியாளர் வரை தனது தொகுதியில் பணியாற்றுவோருக்கு மதிய உணவை தானே தயாரித்து விநியோகிக்கும் பணியை புதுச்சேரி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தொடங்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவு நிறைவுறும் வரை மதிய உணவை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலரும் வீடுகளில் இருக்க, சிலர் தெருவில் சுற்றும் சூழல் உள்ளது. தொடர் பாதுகாப்பில் போலீஸாரும், மருத்துவ சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களும், தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்களும் ஓய்வின்றி பணியில் உள்ளனர்.
சாலையோரம் வசிப்போருக்கு பலரும் தங்களால் முடிந்த வகையில் உணவை தயாரித்து புதுச்சேரியில் விநியோகித்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவற்றோருக்கு பலரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
அதே நேரத்தில், தொடர் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மதிய உணவு சரியான முறையில் கிடைப்பது முக்கியத்தேவையாக உள்ளது. இச்சூழலில் தனது தொகுதியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவோர், போலீஸார், துப்புரவு பணியாளர்களுக்கு உணவை தயாரித்து வழங்க தொடங்கியுள்ளார் புதுச்சேரியிலுள்ள எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.
முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவான இவர் தனது கார் நிறுத்துமிடத்தை தற்காலிகமாக சமையல் கூடமாக்கியுள்ளார். காலையிலேயே தனது உதவியாளர்களுடன் நேரடியாக சமையல் பணியிலும் அவரே ஈடுபட்டு உணவு விநியோகத்தை இன்று (மார்ச் 27) தொடங்கியுள்ளார்.
தயாரித்த உணவை நண்பகலில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக வழங்கினார்.
அதையடுத்து அவரிடம் கேட்டதற்கு, "முக்கியமான இக்காலத்தில் பணியாற்றும் போலீஸார், மருத்துவத்துறையினர், துப்புரவு பணியாளர்களுக்கு மதிய நேரத்தில் சரியான உணவு தர விரும்பினோம். அதையடுத்து இன்று முதல் வீட்டிலேயே உணவு சமைக்க தொடங்கினோம்.
தொடக்க நாளில் சமையலில் நானும் ஈடுபட்டேன். ஊரடங்கு நிறைவடையும் நாள் வரை உணவு தருவதாக தெரிவித்துள்ளோம். உணவு வைத்து தரும் பார்சல் பாக்கெட்டுகள் தட்டுப்பாடாக உள்ளது. அக்கடைகள் மூடியுள்ளன. அது தேவை என ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். நாள்தோறும் மதியம் சுமார் 250 உணவு பொட்டலங்கள் வரை விநியோகிக்கிறோம்" என்று வையாபுரி மணிகண்டன் தெரிவித்தார்.