கொடைக்கானல் மலைப்பகுதி தனியார் தோட்டத்தில் பரவிய காட்டுத்தீ. 
தமிழகம்

கொடைக்கானல் மலை தோட்டப்பகுதியில் காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சேதம்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தோட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மரங்கள் எரிந்து சாம்பலாயின.

கோடை காலம் தொடங்கிய நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே கோவில்பட்டி மலைகிராம பகுதியில் தனியார் பேரிக்காய் தோட்டம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

அவ்வப்போது கோடை வெயிலின் தாக்கம் காணப்படுவதால் காய்ந்த புற்கள் எளிதில் தீப்பற்றி எரியதொடங்குகிறது. காற்றின் வேகத்தில் தீ பரவி அருகிலுள்ள தனியார் தோட்டங்கள், வனப்பகுதிக்கு செல்கிறது.

இதனால் விலை உயர்ந்த மரங்கள் எரிகின்றன. வனப்பகுதிக்கு பரவும் முன் தீயை கட்டுப்படுத்தியதால் வனவிலங்குகளுக்கு சேதமின்றி தவிர்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொடைக்கானல் அருகே வில்பட்டி பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் திடீரென தீ பரவத்தொடங்கியது.

காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. இதனால் மரங்கள் எரிந்தன. மின்மாற்றியில் தீ பரவியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கொடைக்கானல் தீயணைப்புத்துறையினர் தீயை நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT