தமிழகத்தில் அமலில் உள்ள 144தடை உத்தரவைக் காட்டி அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்களைக் கூட போலீஸார் அடித்து விரட்டுகின்றனர்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர மற்றவர்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சாலையின் சந்திப்பிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கடந்துசெல்லும் வாகனங்களை நிறுத்தி,எதற்காக செல்கிறீர்கள் என விசாரிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்குச் செல்வதாக இருந்தால்தொடர்ந்து செல்ல அனுப்புகின்றனர். இல்லையென்றால் திருப்பி அனுப்புகின்றனர்.
ஆனால், ஒருசில இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார், அந்த வழியாக செல்பவர்களை முதலில் அடித்துவிட்டு, அதன்பின்னரே விசாரிக்கின்றனர். சில போலீஸார் தொடர்ந்து அடிக்கமட்டுமே செய்கின்றனர். அடி வாங்கும் நபர் கூறுவதைக் கேட்கக்கூட போலீஸாருக்கு விருப்பம் இல்லை. சென்னை மீனம்பாக்கத்தில் பணிமுடிந்து, வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் டாக்டர் ஒருவரை, காவல் ஆய்வாளர் ஒருவர் லத்தியால் அடிக்க, அவர் நான் ஒரு டாக்டர் என்றுக்கூற, இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என ஆய்வாளர் கூறுகிறார். அந்த டாக்டரை பேசுவதற்குக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.
இதேப்போல, காய்கறி வியாபாரம் செய்யும் விவசாயிகள், வியாபாரிகள், பொருட்கள் வாங்கச் சென்ற மளிகை கடைக்காரர்கள் ஆகியோரும் போலீஸாரிடம் அடிவாங்கியுள்ளனர்.
நாளிதழ் ஏஜென்டுக்கும் அடி
சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாளிதழ்களை விநியோகிக்கும் பணியை செய்து வருகிறார். நேற்று அதிகாலையில் வழக்கம்போல அவர் நாளிதழ்களை வாங்கிக் கொண்டு செல்லும்போது, அங்கே வந்த ஒரு போலீஸ்காரர், செல்வராஜ் மற்றும் அவரது அருகில் இருந்த மற்றொரு நபரை சரமாரியாக லத்தியால் தாக்கினார். பின்னர் அவர்களின் இரு சக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தார். 144 தடை உத்தரவை சுட்டிக்காட்டி இருவரையும் போலீஸ்காரர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்வதும் இருக்கும் நிலையில், அவர்களை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினசரி நாளிதழ்கள் விநியோகம் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்களும் போலீஸாரால் தாக்கப்படும் சம்பவம் குறித்து உயர் காவல் துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்து இருக்கிறார்.
தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களிடம் அண்ணா சாலையில் ஒரு போலீஸ்காரர், கைகளை எடுத்து கும்பிட்டு, வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தநிலையில், அப்பாவிகள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் அதிருப்தியடைச் செய்துள்ளது.
இதனிடையே, வெளியே வருபவர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.