தமிழகம்

கிருமி நாசினிகளை அதிக அளவில் தயாரிக்க முடிவு: 100 மது உற்பத்தி ஆலைகள், 500-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு  அனுமதி 

செய்திப்பிரிவு

100 மது உற்பத்தி ஆலைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கை கிருமிநாசினிகள் தயாரிக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, கைகளைக் கழுவுவதற்கான கிருமிநாசினிகள் தயாரிப்பை அதிகபட்ச அளவுக்கு உயர்த்துமாறு மது உற்பத்தி ஆலைகள் / சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான முடக்கநிலை காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைகள் ஆகியவை கை கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகின்றனர்.

நாளுக்கு நாள் இதனுடைய தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவைகளைச் சமாளிக்கும் வகையில், கை கிருமிநாசினி தயாரிப்பாளர்களுக்கு எத்தனால் / ENA கிடைப்பதில் ஏதும் சிரமங்கள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.

கை கிருமிநாசினிகள் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் மது உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி / உரிமங்கள் வழங்கவேண்டும் என்றும் கலால் ஆணையாளர்கள், கரும்பு ஆணையாளர்கள், ரசாயன மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கை கிருமிநாசினிகள் தயாரிக்கும் திறன் கொண்ட மது உற்பத்தி ஆலைகள் / சர்க்கரை ஆலைகள் போன்றவை கை கிருமிநாசினிகளைத் தயாரிக்க உத்வேகம் தரப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகபட்ச அளவுக்கு அதிகரிப்பதற்கு, இந்த ஆலைகள் 3 ஷிப்டுகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

சுமார் 45 மது உற்பத்தி ஆலைகளுக்கும், வேறு 564 உற்பத்தியாளர்களுக்கும் கை கிருமிநாசினிகள் தயாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது; இன்னும் ஓரிரு நாட்களில் 55க்கும் மேற்பட்ட கூடுதல் மது உற்பத்தி ஆலைகளுக்கு இதற்கான அனுமதி தரப்படவுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் கை கிருமிநாசினிகள் தயாரிக்க மேலும் பல நிறுவனங்களுக்கு உத்வேகம் தரப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலானவை உற்பத்தியைத் தொடங்கிவிட்டன, மீதி நிறுவனங்கள் இன்னும் ஒரு வார காலத்தில் உற்பத்தியைத் தொடங்கும். அந்த வகையில் நுகர்வோருக்கும், மருத்துவமனைகளுக்கும் போதிய அளவில் கை கிருமிநாசினிகள் கிடைக்கும்.

பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் நியாயமான விலையில் கை கிருமிநாசினிகள் கிடைப்பதை உறுதி செய்ய, கிருமிநாசினிகளுக்கு அதிகபட்ச சில்லரை விலையை அரசு நிர்ணயித்துள்ளது. 200 மில்லி அளவுள்ள கிருமிநாசினி பாட்டிலின் விலை ரூ.100க்கு மிகாமல் இருக்க வேண்டும்; மற்ற அளவுகள் உள்ள பாட்டில்களின் விலைகள், அவற்றின் அளவுகளுக்கு ஏற்ற விகிதாசாரத்தின்படி இருக்க வேண்டும்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT