புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்க போதிய இடைவெளி விட்டு காத்திருந்து உரிய பாதுகாப்புடன் காய்கறிகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இருப்பினும் பால், காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரியில் பால் பூத், பழக்கடைகள், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. சில கடைகளில் அரசின் அறிவுறுத்தலின்படி காய்கள் விற்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, போதிய இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. மூன்று, மூன்று பேராக உள்ளே செல்ல காவல் துறை அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் அனைவருமே முகக் கவசம் அணிந்துள்ளனர். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை வருவாய்த் துறை அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு செய்கின்றனர்.
அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை பொதுமக்கள் காத்திருந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொதுமக்கள் தடையின்றி காய்கறிகள் கிடைக்க கோரிக்கை வைக்கின்றனர்.