தமிழகம்

போலீஸார், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் கூடுதல் சிறப்பு ஊதியம்: விஜயகாந்த் கோரிக்கை

செய்திப்பிரிவு

காவல்துறை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் தன்னலமின்றி உழைப்பதால் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டதுபோல் காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்புப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காவல்துறையினருக்கும், மருத்துவத்துறையின் ஒரு அங்கமான ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் கூடுதலாக இதை அறிவிக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழகத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கியதற்கு தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.

அதேவகையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இதேபோன்று ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கடும் வெயிலையும் பாராமல் காவலர்களும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கரோனா நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பணிகளைச் செய்துவரும் அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT