வீண் வதந்திகளை நம்பி கரோனாவை வேடிக்கையாகவோ, அலட்சியமாகவோ கருத வேண்டாம் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சரத்குமார் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "21 நாள் வீட்டில் இருக்க வேண்டிய சூழலில், நேற்று முதல் நாளைக் கடந்து விட்டோம். இன்று இரண்டாவது நாள். நேற்று அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னலைக் கடந்து சென்ற வாகன ஓட்டிகளிடம் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவர வேண்டாம் என அண்ணா சாலை சிறப்பு உதவி ஆய்வாளர் இறங்கி வந்து இரு கைகூப்பி வேண்டுகோள் விடுக்கும் வீடியோவைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
இக்கட்டான சூழலில், நமக்காக, நம் குடும்பத்திற்காக, நாட்டுக்காக கடுமையாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களின் பணியை மதித்து அவர்கள் பணிச்சுமையைக் குறைக்க சுயக் கட்டுப்பாட்டோடு நாம் வீட்டில் இருப்பது நமது வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.
மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும்போது, வைரஸின் தீவிரத்தன்மையை உணர வேண்டும். சில பேர் கூறும் வீண் வதந்திகளை நம்பி கரோனாவை வேடிக்கையாகவோ, அலட்சியமாகவோ கருதாதீர்கள்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் பொருளாதார தேவைக்காக தமிழகத்துக்கு மேலும் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும் என நம்புகிறேன்.
ஒரு குடும்பத்திற்கு பொருளாதார நெருக்கடி எப்படி மன அழுத்தத்தை அளிக்கிறதோ, அதுபோல, தேசம் தற்போது கரோனா பெருந்தொற்று மட்டுமன்றி பொருளாதார பெருந்தொற்றையும் சமாளிக்க வேண்டிய சூழலில் உள்ளது. இந்திய தேசத்திற்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பொருளாதார பேரிழப்பை எத்தகைய பொருளாதார நிபுணர்களாலும் மதிப்பீடு செய்ய முடியுமா என்பது சந்தேகம்.
அதனால், தற்போதைய ஊரடங்கை பொருளாதார அவசர நிலையாக கருதி வருமானத்தை பெருக்குவதற்கும், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளை சரி செய்வதற்கும் ரிசர்வ் வங்கி, மத்திய அரசாங்கம், உலக வங்கி பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு பொருளாதார வல்லுநர் குழு அமைத்து, அவர்களுடன் கலந்தாலோசித்து பணியினை பிரதமரின் மேற்பார்வையில் துரிதப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நடுத்தர வர்க்கத்தினரை பற்றி சிந்திக்கும்போது, பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள் முழுமையாக ஊதியம் கிடைக்குமா? அல்லது பாதி ஊதியம் கிடைக்குமா? கல்வி கடன், ஏனைய வங்கிக்கடன்கள், பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட பல நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, அரசாங்கம் அனைத்து வங்கிகளிடமும் கடன் பெற்றவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்க அறிவுறுத்தி, அந்த 3 மாதத்திற்கான வசூலிக்கப்பட வேண்டிய தொகையை மீண்டும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ சரிவிகிதத்தில் பிரித்து அந்த தொகையையும் இஎம்ஐ ஆக திரும்பப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கரோனா குறித்த செய்திகளை மக்களுக்கு எடுத்து செல்ல பத்திரிகை / ஊடகங்களுக்கு தடை இல்லை எனும்பட்சத்தில், அவர்களின் முதுகெலும்பாக இருக்கும் பொருளாதார ஆதாரம் விளம்பரங்கள், ஊரடங்கு உத்தரவால் நாட்டில் உள்ள அனைவரின் பொருளாதாரம் பாதிப்படைந்த சூழலில், மக்கள் வீட்டில் இருப்பதை பயன்படுத்தி அதிகமாக விளம்பரங்களுக்கு செலவிடும் பணத்தைக் குறைத்து கரோனா வைரஸ் நிவாரணத்திற்காக நீங்கள் சார்ந்துள்ள மாநில முதல்வரிடம் நிதியாக வழங்கிட வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஊரடங்கின் போது விளம்பரத்திற்குச் செலவிடும் பணத்தை விளம்பரதாரர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதன் மூலம் மேற்கொண்டு மருத்துவமனை அமைப்பதற்கோ, உபகரணங்கள் வாங்குவதற்கோ, வென்டிலேட்டர், கைகளைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் சானிட்டைசர், மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் உயர்தர முகக் கவசங்கள் வாங்குவதற்கோ, பொருளாதார நெருக்கடிகளை ஓரளவு சமாளிப்பதற்கோ பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா வைரஸ் தாக்குதலை எல்லாரும் உறுதியோடு ஒன்றிணைந்து போராடி முறியடிப்போம்" என சரத்குமார் தெரிவித்துள்ளார்.