தமிழகம்

கேன்களில் குடிநீர் விற்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

சென்னை

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் சென்னையைச் சேர்ந்த வாசகி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொரட்டூர் வாசகி ஹேமாவதி, உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு நியமனமும் வழங்கப்பட்டுவிடும் என்று சொன்னார்கள். இன்னும் தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) கூட வெளியிடப்படவில்லை.

இது எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையிலானதா, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு கருத்தில்கொள்ளப்படுமா என்பது குறித்து இதுவரை முறைப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பொறுத்தவரையில், தேர்வு முடிவு வெளியான அடுத்த சில நாட்களில் கீ ஆன்சர் வெளியிடப்படும். இறுதி தேர்வு முடிவின்போது கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடுவார்கள். டிஎன்பிஎஸ்சி போல ஆய்வக உதவியாளர் பணி தேர்வும் வெளிப்படையான முறையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு குறித்து தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய பட்டியல் பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது” என தெரிவித்தனர்.

***

சென்னை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தில் மீன் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும்

சென்னை

பாலவாக்கத்தில் சென்னை பல் கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் மீன் விற்பனை அங்காடி அமைக்கலாம் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாலவாக்கத்தைச் சேர்ந்த பெ.விஜய சேனன் என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலை பேசி சேவையைத் தொடர்பு கொண்டு கூறியதாவது:

கிழக்கு கடற்கரைச் சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதியில் சில்லறை மீன் வியாபாரிகள் உள்ளனர். தற்போது கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இச்சாலையில் பாலவாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் காலி இடத்தில் மீன் விற்பனை அங்காடிகளை அமைத்தால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். மீன் விற்பனையும் சுகாதாரமாக நடைபெறும். தற்போது அந்த இடத்தை தனியார் பஸ்களை நிறுத்திவைக்க பயன்படுத்தி வருகின்றனர். இவ்வருமானம் அரசுக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ செல்வதில்லை.

இவ்வாறு விஜயசேனன் கூறினார்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இது நல்ல யோசனை. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து மீன் விற்பனை அங்காடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

***

கேன்களில் குடிநீர் விற்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும்

சென்னை

கேன்களில் குடிநீர் விற்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுப்பேட்டையில் வசிக்கும் மணிவாசகர் கூறியதாவது:

கேன்களில் ரூ.30-க்கு விற்கப்படுகிற குடிநீரைத்தான் பொது மக்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கேன்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை கிடையாது. கேன்களில் விலை விவரம், தயாரிப்பாளர் விவரங்கள் இல்லை. கேன் குடிநீரை கொண்டுவருபவரிடம் கேட்டால், நல்ல குடிநீர்தான் என்று கூறுகிறார்கள். ஆனால் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. சில நேரங்களில் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. கேன்களும் சுத்தமானதாக இருப்பதில்லை. கேன்கள் உடையும் வரை அதே கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கம்பெனி பெயர்களை தாங்கி ரூ.50-க்கு விற்கப்படும் கேன் குடிநீரை எல்லோராலும் வாங்க முடியாது. ஆனால் குறைந்த விலைக்கு பெறப்படும் குடிநீர் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். மக்களின் உடல்நலம் சார்ந்த விஷயம் என்பதால், இதை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்கும் பி.ஐ.எஸ். அரசு நிறுவனத்தின் சென்னை கிளை தலைவர் நாராயணன் கூறும்போது, “உரிமம் பெறாமல் ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்டு கேன்களில் குடிநீர் விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த வாரத்தில் தமிழகத்தில் இதுபோன்று இயங்கி வந்த 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். ஐ.எஸ்.ஐ. முத்திரை போட்டிருந்தும் தண் ணீரின் தரம் குறைவாக இருந்தால் >www.bis.org.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

SCROLL FOR NEXT