ஊரடங்கு உத்தரவை மீறி, சாலைகளில் சுற்றியதாக கோவையில் 122 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, அத்தியாவசியத் தேவைகள் இன்றி மற்ற பயன்பாடுகளுக்காக சாலைகளில் மக்கள் சுற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 1,500 போலீஸாரும், மாவட்டப் பகுதியில் 1,200 போலீஸாரும் என, மொத்தம் 2,700 போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று (மார்ச் 25) காலை முதல் இரவு நிலவரப்படி சாலைகளில் தடையை மீறி சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தடையை மீறி சாலையில் சுற்றியதாக கோவை மாநகர போலீஸார் 23 வழக்குகள் பதிவு செய்து, 35 பேரைக் கைது செய்துள்ளனர். கோவை மாவட்ட போலீஸார் 69 வழக்குகள் பதிவு செய்து 87 பேரைக் கைது செய்தனர். இரண்டும் சேர்த்து மொத்தம் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிசி 188, 269, 270 மோட்டார் வாகனச் சட்டம் 181, 121 ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.