தமிழகம்

அப்துல் கலாம் மறைந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை: கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் உருக்கம்

செய்திப்பிரிவு

அப்துல் கலாம் மறைந்த துக்கத்தை தாங்க முடியாமல், திருப்போரூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞர் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் சுப்ரமணி(26). திருப்போரூரை அடுத்துள்ள இள்ளலூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும், சக பணியாளர்களுடன் கன்னகப்பட்டு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சுப்ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. வீட்டில் உடன் தங்கியிருந்த நபர்கள், இதுதொடர்பாக திருப்போரூர் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், வீட்டில் சோதனை செய்த போலீஸார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், நான் மிகவும் நேசித்த ‘கலாம் ஐயா’ அவர்களின் இறப்பு என்னை மிகவும் பாதிக்க செய்தது.

இப்படிப்பட்ட தூய்மையான மாமனிதரைப் பார்த்ததே இல்லை. கலாம் ஐயாவுக்கு யாரும் செய்யாத அஞ்சலியாக எனது உயிரை நானே மாய்த்துக் கொண்டு, இந்த உயிர் அஞ்சலியை செலுத்துகிறேன். எனது அஞ்சலியை அவர் ஏற்றுக் கொள்வார். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்ரமணியுடையதுதானா என மேலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT