மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் தேனி, திருவாரூர், திருநெல்வேலி, கோவை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இவைதவிர, சென்னை அப்போலோ மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் என்ற ஆய்வகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 7 அரசு ஆய்வகங்களிலும், 3 தனியார் ஆய்வகங்களிலும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரை, திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “8 அரசு ஆய்வகங்கள், 3 தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
இவைதவிர ஏற்கெனவே அனுமதி கிடைத்துள்ள திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை விரைவில் தொடங்கப்படும். அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த மருத்துவமனைகளுக்கு சென்றால், அங்குள்ள டாக்டர்கள் தேவை இருந்தால் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். பொதுமக்கள் யாரும் நேரடியாக ஆய்வகத்துக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள முடியாது” என்றனர்.