மதுரையில் ‘கரோனா’ நோயாளி இறந்த அண்ணாநகர் குடியிருப்புப் பகுதிக்கு போலீஸார் ‘சீல்’ வைத்தனர். அதனால், மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நோயாளி இன்று அதிகாலை ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.
அவர், அண்ணாநகரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். அப்பகுதியில் மக்கள் மிக நெருக்கமாக வசிக்கின்றனர்.
அதனால், உயிரிழந்தவருடனும், அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், அவர் வசித்தப்பகுதிக்கு இன்று முதல் போலீஸார் ‘சீல்’ வைத்துள்ளனர்.
ஆங்காங்கே அந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றி தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து, அப்பகுதியில் இருந்து மக்களை வெளியே முடியாமல் வீட்டிற்கு திருப்பிப் அனுப்பினர். உயிர் காக்கும் சிகிச்சை, அத்தியாவசிய பணிகளில் இருப்போரை மட்டுமே அந்த குடியிருப்புகளில் இருந்து, அதுவும் போலீஸார் உயர் அதிகாரிகள் அனுமதியைப் பெற்று அனுமதிக்கின்றனர்.
மாத கடைசி என்பதால் வீடுகளில் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் இருப்பு இல்லாததால் மக்கள் அந்தப் பொருட்களை வாங்க செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்துகின்றனர். ஆனால், அதற்கு போலீஸார் தடை விதிப்பதால் மக்கள் இருக்கிற பொருட்களை வைத்து சமாளிக்கின்றனர்.
அதனால், அப்பகுதி குடியிருப்புகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்களும் ஒரு வித அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கிப்போய் உள்ளனர்.
சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான கவுன்சிலிங் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.