தமிழகம்

மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையம் மூடப்பட்டது: ஒப்பந்த, கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

அ.அருள்தாசன்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத அடுத்து மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையம் மூடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரியில் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம் இயங்குகிறது. இந்த மையத்தில் இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் இன்ஜின் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

அவ்வாறு தயாரிக்கப்படும் இன்ஜின்களை இயக்கி வெள்ளோட்டமும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த மையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகிறார்கள்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் இம்மையமும் மூடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தவிர வேறுயாரும் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் இந்த வளாகத்தில் ஒப்பந்தப் பணியில் ஈடுபடுவோரும் பணிகளுக்கு வரவில்லை. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT