தமிழகம்

துபாயில் இருந்து திரும்பிய கழுகுமலை இளைஞருக்கு மூச்சுத்திணறல்: நெல்லை மருத்துவமனையில் அனுமதி

எஸ்.கோமதி விநாயகம்

துபாய் நாட்டில் இருந்து திரும்பிய கழுகுமலையைச் சேர்ந்த இளைஞருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கழுகுமலையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் துபாய் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி கழுகுமலைக்கு வந்தார். வருவாய்த்துறை எடுத்து பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அவரது குடும்பம் ஏற்கெனவே மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த இளைஞருக்கு இன்று (புதன்கிழமை காலை) முதல் தலைவலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இதுகுறித்து அவர் இன்று காலை கழுகுமலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கழுகுமலை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, கரோனா பரிசோதனைக்கு ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 4 முதல் நான்கரை மணி நேரத்தில் முடிவு தெரியவந்துவிடும். முடிவைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். இந்த செய்தி பதிவுசெய்யப்பட்ட நேரம் கழுகுமலை இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நேரம். அந்த நேரத்தில் இளைஞரின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT