தமிழகம்

தினக்கூலிப் பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை உங்களால் அறிவிக்க முடியுமா? - பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு

செய்திப்பிரிவு

தினக்கூலிப் பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை உங்களால் அறிவிக்க முடியுமா? என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், "அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் ஆணையைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம். இது கண்டிப்பாக இந்த நேரத்தில் தேவையான ஒன்றுதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடால் அதிகம் பாதிக்கப்படும் நமது தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஏதேனும் நலத்திட்டங்களை உங்களால் அறிவிக்க முடியுமா?

21 நாட்கள் என்பது அதிகமில்லை. நமக்காகவும், நமது அன்பானவர்களுக்காகவும் நாம் விதியை மதிக்க வேண்டும். உங்களுக்கு உங்கள் மீது, முக்கியமாக வயதான உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீது நிஜமாகவே அக்கறை இருந்தால் வீட்டிலேயே இருங்கள். குடும்பமாக நாம் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டுகளை மீண்டும் விளையாடுங்கள். நம் உறவைப் பலப்படுத்தக் கிடைத்திருக்கும் நேரம் இது."

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT