தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே கரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் இறந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வெளிநாடுகளுக்கோ வெளிமாநிலங்களுக்கோ அண்மையில் சென்று வந்திராத அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இருப்பினும், அவர் அண்மையில் தாய்லாந்தில் இருந்து வந்தவர்களை சந்தித்ததாகவும், விஷேச நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த பரிசோதனை மையம் அமையவுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனையை உடனுக்குடன் மேற்கொள்ள வழி பிறந்துள்ளது.

இந்த பரிசோதனை மையம் தமிழகத்தில் 8-வது கரோனா பரிசோதனை மையமாகும். ஏற்கெனவே சென்னை(கிங்ஸ் பரிசோதனை மையம்), தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் இருந்த நிலையில் தற்போது 8-வதாக மதுரையில் ஓர் ஆய்வு மையம் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT