புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவ டிக்கை தீவிரமடைகிறது. நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கைகூப்பி கேட்கிறோம்; வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.
கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு உறுப் பினர்கள் முழு ஆதரவை கொடுத்துள்ளனர்.
கரோனா உலகையே உலுக்கும் நோயாக உள்ளது. இத்தாலியில் நேற்று முன்தினம் (22-ம் தேதி) 900 பேரும், நேற்று (நேற்று முன்தினம்) 700 பேரும் இறந்துள்ளனர். சீனா வீட்டுக்குள் இருந்து மக்களை வெளியே வராமல் ராணுவத்தை வைத்து தடுத்து நிறுத்தியதால் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்துள்ளது.
தற்போது இத்ததாலி, ஈரான், பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, அபுதாபி, துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் பெரிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும், இந்த நாடுகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே கரோனா குறித்த அதிக விழிப்புணர்வு நமக்குத் தேவை. குறிப்பாக புதுச்சேரிக்கு விழிப்புணர்வு தேவை. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி இது. கைக்கூப்பி கேட்கிறோம். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம்.
700 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள்
கரோனாவுக்காக பல் மருத்துவ கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை யில் ஏற்படுத்தப்பட இருந்த 150 தனிமைப் படுத்தப்பட்ட படுக்கைகள் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 700 படுக்கைகளையும் கரோனா சிறப்பு மருத்துவத்திற்காக தயார் செய்து வருகிறோம்.
அத்தியாவசியமான மருத்துவம், காவல்துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை தவிர பிற துறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை துறைத் தலைவரே எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் திறந்திருந்தால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இன்று ஒரு நாள் திறந்திருக்கும்
மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாளை முதல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் பால், மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் அத்தியாவசிய கடைகளும் அதன் பிறகு மூடப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.