தமிழகம்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பொது மருத்துவமனையில் ட்ரோனில் கிருமிநாசினி தெளிப்பு 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சென்னை அரசு பொது மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழகசுகாதாரத் துறை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சோதனை முயற்சியாக நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் ‘ட்ரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரு லிட்டர் கிருமி நாசினியுடன் 100 மீட்டர் உயரத்துக்கு பறந்த ட்ரோன் ஒன்று முதல் ஒன்றரை கிலோ மீட்டர் வரை கிருமி நாசினியை தெளித்தது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமுதாய இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து கை கழுவ வேண்டும். தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒரே கடையில் கூட்டமாக கூடக் கூடாது.

மதுரையைச் சேர்ந்த ஒரு வர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி முதல்கட்டமாக இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

பேட்டியின்போது பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT