தமிழகம்

கரோனா; தமிழகத்தில் முதல் பலி: மதுரையில் சிகிச்சையிலிருந்தவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் சிகிச்சையில் இருந்த 54 வயது ஆண் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனாவின் கோர தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரைக் கடந்துள்ள கரோனா பாதிப்பில், இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உயிரிழப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பல நாடுகள் கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன.

இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர். பிரதமர் நேற்றிரவு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 18 பேரில் 16 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர்.

ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். முதன்முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெளியூரிலிருந்து வராமல் உள்ளூரில் வசித்து வந்த 54 வயது நபர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருந்த அந்த நபர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கரோனா வைரஸ் வயதானவர்களை அதிகம் பாதிக்கும்.

நீரிழிவு நோய், சுவாசக்கோளாறுகள், கிட்னி மாற்று சிகிச்சை, கிட்னி பாதிப்பில் உள்ளவர்கள் போன்றவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது தீவிரமாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் 54 வயது ஆண் கரோனா வைரஸ் பாதிப்புக்குன் ஆளான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்தும் நேற்று மாலை முதல் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்க மறுக்கிறது. தீவிரமாக அவரது உயிரைக் காக்க மருத்துவர்கள் போராடினார்கள். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்:

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வராமல் உள்ளூரில் மதுரை அண்ணா நகரில் வசித்த அவருக்கு எப்படித் தொற்று ஏற்பட்டது என்று அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று இதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்

தாய்லாந்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றுடன் வந்துள்ள நபர்களுடன் மதுரை நபர் பழகியுள்ளதை விசாரணையில் கண்டுபிடித்துவிட்டோம், அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களையும் தனிமைப்படுத்திவிட்டோம் எனவே, எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவருக்கு திடீரென வைரஸ் தொற்று ஏற்பட்டது என பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

கரோனா பாதிப்பினால் இதுவரை உயிரிழந்த அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே. மதுரையில் உயிரிழந்த நபர் 54 வயதானவர். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கரோனா தொற்றும் ஏற்பட்டதால் மேலும் உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 18. அதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரசு சொல்வதுபோல் தீவிர தனிமைப்படுத்தல் ஒன்றே கரோனாவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் ஒன்றாக அமையும்.

SCROLL FOR NEXT