தமிழகம்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 7-ல் தொடக்கம்- அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை

சுப.ஜனநாயகச் செல்வம்

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான விடைத்தாள்கள் மைய மதிப்பீட்டுப் பணிகள், மண்டல முகாம் சார்ந்த பணிகள் மார்ச் 31-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர், இன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசுத்தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணைக்கிணங்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கெனவே மார்ச் 31ம் தேதியன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும், மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

இம்மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 7ம் தேதியன்று தொங்கப்படும். இதுகுறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும், விடைத்தாட்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT