வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பிய 243 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தவர்களுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அறிகுறி இல்லாதவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்கள், 2 வாரங்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்கியிருக்க வேண்டும் என்றும், வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, வீடுகளில் சுய கட்டுப்பாடுடன் தனிமையில் இருப்பவர்களை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வெளிநாடுளில் இருந்து வந்த 19 பேர் இவ்வாறு தொடர் கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவர்களும் 2 வாரங்களுக்கு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து சுய தனிமையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இன்று வரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பி வந்த 243 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் சுகாதாரத் துறையினர் தொடர்புகொண்டு, உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கேட்டறிந்து வருகின்றனர்.