தமிழகம்

ஒரே ஆண்டில் தமிழகத்தில் 68 விவசாயிகள் தற்கொலை: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கடன்சுமை, பட்டினி போன்ற காரணங்களினால் தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 99 லட்சம் இளைஞர்கள் உள்பட இந்தியாவில் 10 கோடி பேர் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1.22 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் மட்டும் 68 விவசாயிகள் கடன் சுமையாலும், பட்டினியாலும் தற்கொலை செய்து கொண்டிருப் பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறினாலும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதிலோ, விவசாயி களைக் காப்பாற்றுவதிலோ எந்த அரசும் அக்கறை காட்டாததால்தான் இந்த நிலை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

இப்போது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி பேர் குடிக்கிறார்கள். தமிழகம் அழிந்தது மதுவால்தான் என்ற நிலை ஏற்படுவதற்கு முன்னதாக அரசு மதுபான விற்பனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT