நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள்:
செய்தித்துறை
1. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் மணி மண்டபத்தில், முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.
2. பணிக் காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக 1.8.2018 அன்று முதல் உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டேன். இம்மருத்துவ நிதி உதவி 2 லட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தி வழங்கப்படும்.
3. தூத்துக்குடி மக்களால் 'மக்களின் தந்தை' என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸின் சேவையைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அச்சமயம் தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
தொழில் துறை
1. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொழிற் பூங்காவில், முதற்கட்டமாக சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவ மூலப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும். மருந்து உற்பத்திக்குத் தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் குறிப்பாக, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, மூலப்பொருட்கள் சேகரிப்பு நிலையம், உலர் மற்றும் குளிரூட்டு நிலையம், நவீன ஆய்வக வசதிகள், கிடங்குகள், அவசரகால நடவடிக்கை மையம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கியதாக இப்பூங்கா இருக்கும்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை
1. கரோனா வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்று நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அளவிலான தனிமைபடுத்தப்பட்ட மருத்துவமனையாக, தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையும், மூன்று மண்டல அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக, மதுரை மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானடோரியம் ஆகிய மருத்துவமனைகளும், சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திலுள்ள ஆய்வகத்தை பயோ-சேஃப்டி லெவல்-3 நிலைக்கு மேம்படுத்துவதற்கும் 110 கோடி ரூபாய் செலவிடப்படும்.
2. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடி சிகிச்சை மேற்கொள்ள துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வான்வழி அவசர கால சேவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
1. நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
1. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும், உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
2. உயர் கல்வித் துறை
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்த ஜெயலலிதாவைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு, அவ்வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.