ஊரடங்கை பின்பற்றாத மக்கள் 
தமிழகம்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாத மக்கள்; கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர்.

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக புதுச்சேரியில் நேற்று (மார்ச் 23) இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் வழியாக வரும் எந்த வெளியூர் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அவை திருப்பி அனுப்பப்படுகின்றன.

நகர பகுதியில் பொதுமக்கள் இரு வாகனங்களில் ஆங்காங்கே சுற்றுவதை பார்க்க முடிகிறது. இதனால் போலீஸார் அவர்களை விவரம் கேட்டு தேவை இல்லாதவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

வெளியூர் மக்கள் புதுச்சேரி உள்ளே நுழைய விடாமல் போலீஸார் தடுக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

மாநில எல்லையில் அரசு பேருந்தை திருப்பி அனுப்பும் போலீஸார்

இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி போலீஸார் அவர்களை அறிவுறுத்தித் திருப்பி அனுப்புகின்றனர். இருப்பினும், வெளி மாநிலத்திற்கு தமிழக பகுதிக்கு வேலைக்கு செல்வோர் அடையாள அட்டையை காண்பித்து போலீஸாரிடமிருந்து செல்கின்றனர். தமிழக பகுதியில் இருந்தும் அரசு வாகனங்கள் கூட புதுச்சேரியில் நிறுத்தப்படுகின்றன.

கரோனாவின் பாதிப்பை உணராமல் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் இருப்பது ஆபத்துக்குரியதே என போலீஸார் கருத்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT