கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்கும்பொருட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை தனிமைப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளை காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, செங்கை, காஞ்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உறவினர்கள், பார்வையாளர்கள் வருகைக்கு தடையும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தி மருத்துவமனைகளில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதைமீறும் சிலர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், மருத்துவப் பணியாளர்களுக்கு அது இடையூறை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.