காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பேச வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையப்பணிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் விவரம்:
காவல் நிலையத்துக்கு புகார்கொடுக்க வருபவர்களை, நிலையத்துக்குள் அழைத்துச் செல்லவேண்டாம். காவல் நிலையத்துக்குவெளியே இருக்கையில் அமரவைத்து, புகார் மனுவை வாங்கவேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில்தான் மனுதாரர்களை சந்திக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்டு, எந்த விசாரணையும் இல்லாமல் அவர்களை அனுப்பிவிட வேண்டும்.
50 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் நிலையத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலைய வாசலில் தண்ணீர், கை கழுவும் திரவம் வைக்க வேண்டும். அனைவரும் கைகளை சுத்தம் செய்தபிறகுதான் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டும்.
பணியில் இருக்கும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் காவலர்கள் வீட்டுக்கு வெளியே கைகளை சுத்தம் செய்த பின்பே உள்ளே செல்ல வேண்டும்.
கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்து தகவல் வந்தால்,அவர்கள் தெரிவிக்கும் முகவரிக்கு உடனடியாக செல்லக் கூடாது. 104 மருத்துவ உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, அவர்களுடன் மட்டுமே செல்ல வேண்டும்.
வாகன சோதனையில் ஈடுபடும்காவலர்கள் ஓட்டுநரிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டே பேச வேண்டும். அத்தியாவசிய பொருட்களை விற்கும் இடங்களான பல்பொருள் அங்காடி, பல சரக்கு கடைகளுக்கு வெளியே கட்டாயம் பக்கெட்டில் தண்ணீர், கை கழுவும் திரவம் வைக்க அறிவுறுத்த வேண்டும்.