சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், நேற்று காய்கறிகள் வாங்க வந்த மக்கள் கூட்டம். 
தமிழகம்

மளிகை, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

செய்திப்பிரிவு

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில் சென்னையில் உள்ள மளிகை, காய்கறி கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதன் இணைப்பு சங்கிலியை உடைக்கும் விதமாக 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை, மொத்தம் 22 மணி நேரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையில் நாடு முழுவதும் கரோனா தொற்று உள்ளோர் வாழும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்துமாறு முடக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,கரூர் ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 3 மாவட்டங்களை முடக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், தமிழக அரசு மேலும் பல மாவட்டங்களை முடக்கலாம், கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று கருதிய பொதுமக்கள், அத்தியவாசிய பொருட்களை வாங்க மளிகை மற்றும் காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். இதனால்பல கடைகளில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், அவர்கள் எடுத்து வரும் பொருட்களை கணக்கிட முடியாமல் பணியாளர்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

கடைகளுக்குள் போதிய இடம்இல்லாத காரணத்தால், பல கடைகளின் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதித்து, கதவுகளை தற்காலிகமாக மூடினர். வெளியேறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல மளிகைகடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் நேற்று ஸ்தம்பித்தன.

பொதுமக்கள் கணித்தது போன்றஇன்று மாலை 6 மணி முதல்அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்களி, பால், இறைச்சி போக்குவரத்து மற்றும் கடைகள் நடத்ததடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தசில தினங்களில் அரசின் அறிவிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கருதிய பொதுமக்கள் தொடர்ந்து மளிகை, காய்கறிகளை வாங்கிச்சென்றவாறு உள்ளனர். அதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது.

SCROLL FOR NEXT