தமிழகம்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் என்னென்ன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

தனிமைப்படுத்தப்பட்டோர் விவரம்

ஏற்கெனவே வெளிநாடு மற்றும்வெளிமாநிலங்களுக்கு பயணம்செய்தவர்களின் வீட்டுக்கதவில்‘வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’ என்ற விவரம் ஒட்டப்பட வேண்டும். இப்பட்டியல் காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் களத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பகிரப்பட வேண்டும். இதனால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிற மக்களுடன் தொடர்புகொள்வது தவிர்க்கப்படும்.

தனியாரிடம் கரோனா வைரஸ் நோய் தொற்றை கண்டுபிடிக்கும் பரிசோதனை வசதியை ஏற்படுத்தி, பரிசோதிக்க வேண்டியவற்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்குப் பயணித்தோர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரைத் தீவிரமாகக் கண்காணித்து சமுதாயத்தின் நலன் கருதி சுய தனிமைப்படுத்துதல் மூலம் அவர்கள் யாரும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வசதிகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் மருத்துவ சேவைக்கென 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

தூய்மைப் பணி கண்காணிப்பு

அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் தூய்மை பராமரிக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து, தூய்மைப்படுத்த வேண்டும். காவல்துறையினர் இக்கடைகளில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களை மட்டுமே வைத்து பணியாற்ற வேண்டும். எனினும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து முழு மனதுடனும், மனஉறுதியுடனும் தமிழக அரசுடன் பொதுமக்கள் தோளோடு தோள் நிற்க வேண்டும். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும், முழுமையான தகவல்களை சுகாதாரத் துறைக்கு அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பெரும் சவால்

கடந்த 100 ஆண்டுகளில் இவ்வுலகம் சந்தித்திடாத பெரும் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. இந்த நேரத்தில்மக்களின் ஆதரவும், நடைமுறைஒழுக்கமும், சுய தனிமைப்படுத்தலும் உடனடியான தேவையாகும்.

சென்னை விமான நிலையத்தில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு கண்காணிப்பில் 198 பேர்இருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 54 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.500 கோடி நிதி

வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை மேலும் கூடுதலாக்கி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தற்போது ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம்.

அரசைப் பொறுத்தவரை ஒரு உயிரைக்கூட இழக்கத் தயாராக இல்லை. இது ஒரு பெரிய நோய். இதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு நோய்த்தடுப்பு பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் இருந்து நோய் முழுமையாக ஒழிக்கப்படும் வரை எங்கள் பணி தொடரும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT