கரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9 ஆக இருந்த எண்ணிக்கை மேலும் 3 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில் 12 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.
கரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பல நாடுகள் கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றன.
இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
நாளை மாலை முதல் தமிழகம் முழுதும் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவுவதை கடுமையாக அரசு கண்காணித்து வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 9 பேரில் 8 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர்.
ஆனால் இம்முறை கண்டறியப்பட்ட 3 பேரில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். முதன்முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமுதாய நோய்த்தொற்று நிலை என்பது உள்ளூரில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுதல் ஆகும். தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் நோய்த்தொற்று ஏற்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியவர் யார், அவருக்கு யார் மூலம் வந்தது, இன்னும் எத்தனைப்பேர் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் தகவல்:
கரோனா தொற்று உள்ள மேலும் 3 பேர் கண்டறியபட்டுள்ளனர். ஒருவர் சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் 25 வயது இளைஞர். லண்டனிலிருந்து வந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேப்போன்று மற்றொரு நபர் திருப்பூரைச் சேர்ந்தவர். 45 வயதான இவரும் லண்டனிலிருந்து வந்துள்ளார். மூன்றாவது நபர் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயது நபர். இவர் உள்ளூர்க்காரர். 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நபரின் மனைவி மற்றும் கார் ஓட்டுநரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.