கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவின் நிபந்தனைகளை குறிப்பிட்டு விரிவான அரசாணையை தமிழக அரசு இரவு வெளியிட்டது அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்டிப்பாக வீடுகளில் தனித்திருக்க வேண்டும். மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்படுகிறது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகளைத் தவிர அனைத்து கடைகள்,, வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும். அரசு, தனியார் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் உள்பட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படும். மேலும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை இருக்காது.
அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் மார்ச் 31 வரை வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். எனினும் இந்த விதிமுறை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவப் பிரிவு, அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்தாது. அவை வழக்கம்போல் செயல்படும்.
செயல்படும் துறைகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பொதுத்துறை, உள்துறை, நிதித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய் மற்றும் சட்டம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய அரசு துறைகளின் தலைமையங்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, நீதிமன்றங்கள். மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம ஊராட்சிகள், மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள், மண்டல போக்குவரத்து அலுவலகங்கள்.வணிகவரித்துறை அலுவலகங்கள், கணக்கு கருவூல அலுவலகங்கள். ரேஷன் கடைகள். ஆவின் நிறுவனங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் அவசியமானவை என கருதப்படும் அலுவலகங்கள் அனைத்தும் இயங்கும்.
தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள், மாவு மில் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான நிறுவனங்கள், பால் பூத்துகள், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள், பத்திரிகை ஊடக அலுவலகங்கள் போன்றவை செயல்படும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.
உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனினும் ஸ்விக்கி, ஊபர், சொமட்டோ போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. டீ கடைகளில் கூட்டம் கூடக்கூடாது. பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள், விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன் கடைகள் உள்ளிட்ட கடல்சார் உணவு தொடர்பான கடைகள் செயல்படும்.
நிறைமாத கர்ப்பிணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களை கண்காணித்து, சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மூலம் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பெரும் வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். எனினும், வழிபாட்டு தலங்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்ளலாம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) திட்டமிட்டபடி நடைபெறும். அதேநேரத்தில், மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது.
மார்ச் 16-ம் தேதிக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்களை மட்டும் 30-க்கும் குறைவான விருந்தினர்களுடன் திருமண மண்டபங்களில் நடத்திக்கொள்ளலாம். ரத்துசெய்யப்பட்ட திருமணங்களுக்கான முன்தொகையை திருமண மண்டபங்கள் திரும்பக் கொடுக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள், காவல்ஆணையர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் மேற்குறிப்பிட்டவிதிமுறைகளை உறுதியாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.