கரோனா வைரஸ் எதிரொலியாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் செயல்படும் 9 மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும் என பாஸ்போர்ட் அலுவலர் த.அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் எண்ணிக்கை நேற்று முதல் பாதியாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவசரத் தேவை உள்ளவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், காய்ச்சல், தலைவலி, சளி போன்ற வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கோ, அலுவலகத்திற்கோ வருவதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட விசாரணை நடைமுறை 2 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படுவதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் த.அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் செயல்படும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்திலுள்ள தபால் சேவை மையங்கள், மதுரை, நெல்லையிலுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் வரும் மார்ச் 31-ம் தேதிவரையில் செயல்படாது.
ஏற்கெனவே பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வர காத்திருப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு தேதியை மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.