கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தூத்துக்குடியில் இன்று மாலையே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
அரசின் எச்சரிக்கைகளை மீறி மக்கள் அதிகமான அளவில் கடை வீதிகளில் நடமாடியதைத் தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் இன்று மாலை அடைக்கப்பட்டன.
மேலும், 144 தடை உத்தரவு நாளை மாலை அமலுக்கு வரவுள்ளதால் மக்கள் இன்று மாலையில் சந்தைகள், பலசரக்கு கடைகளில் குவிந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தது.
இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்தனர். கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நகரங்களும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தொடங்கின. பெரும் வணிக வளாகங்கள், ஜவுளி கடைகளை தவிர மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கின.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வழக்கம் செயல்பட்டது. ஆனால் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சில மக்கள் மனுக்களை கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். ஆனால், அவர்களிடம் அதிகாரிகள் யாரும் மனுக்களை வாங்கவில்லை. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் சோப்பு போட்டு கைகளை கழுவிய பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் எனவும், அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மக்கள் கடை வீதிகளில் அதிகளவில் நடமாட தொடங்கினர். சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் படையெடுக்க தொடங்கின. இதையடுத்து தூத்துக்குடியில் காய்கறி, பால், பலசரக்கு, மருந்து போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர ஏனைய கடைகளை இன்று மாலையே அடைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தி சென்றனர். தொடர்ந்து காவல் துறையினர் ஒவ்வொரு கடையாக சென்று அடைக்க வலியுறுத்தினர். இதையடுத்து தூத்துக்குடியில் இன்று மாலையிலேயே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று மாலையே அடைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் இன்று மாலையே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க காய்கறிச் சந்தைகள், பலசரக்குக் கடைகளில் இன்று மாலை மக்கள் கூட்டம் அலைமோதியது.
வழக்கமாக மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தை இன்று மாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மக்கள் பல நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.
இதேவேளையில் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்தல், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் போன்ற பணிகளை அவர்கள் செய்தனர்.