கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாடு முழுவது ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மதுரை ரயில் நிலையம் பிரதான நுழைவு வாயிலில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் மதுரை ரயில் நிலையமும் ஒன்று. மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக தினமும் சுமார் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்த ரயில் நிலையம் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாடு முழுவது ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் 70 ரயில்களும் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை ரயில் நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிசோடி காணப்படுகிறது.
தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இப்பகுதி வெட்ட வெளியாகக் காட்சி அளிக்கிறது. இதன் பிரதான நுழைவு வாயில் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் இன்று அங்கு திரண்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இருப்பினும், ரயில்கள் இயக்கப்படவில்லை என்றாலும், ரயில்வே நிலைய வளாகம், பிளாட்பாரங்கள் தொடர்ந்து தூய்மைப் பணி நடக்கிறது. தேவையின்றி ரயில் நிலையத்திற்கு யாரும் நுழைவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து போலீஸார் கண்காணிக்கின்றனர்.