தமிழகம்

முகக் கவசத்தை பதுக்குபவர் மீது குண்டர் சட்டம்: விருதுநகரில் கடைகளில் போலீஸார் திடீர் சோதனை

இ.மணிகண்டன்

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மாஸ்க் மற்றும் கிருமி நாசினி போன்றவற்றை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் தமிழக அரசு சேர்த்துள்ளது.

மேலும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை பதுக்குவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் ஏராளமானோர் முகக் கவசம் அணிந்து செல்கின்றனர். கைகளைக் கழுவதற்காக கிருமி நாசினிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டு ஒருசில கடைகள் மற்றும் மருந்தகங்களில் சிலர் முகக் கவசங்களையும் கிருமி நாசினிகளையும் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகளையும் தமிழக அரசு சேர்த்துள்ளது.

மேலும், முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதையடுத்து, விருதுநகரில் முகக் கவசங்கள் மற்றும் கிரிமி நாசினிகள் பதுக்கப்படுகிறதா என்பது குறித்தும் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்தும் விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீஸார் பல்வேறு கடைகளிலும், மருந்தகங்களிலும் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் பதுக்கப்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT