தமிழகம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் நேற்று உயிரிழந்தார். அதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிப்பிபாறை அருகே இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்ற இந்த ஆலையில் சட்டவிரோதமாக பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. பேன்ஸி ரக பட்டாசுகளுக்கான மருந்து கலவையின்போது கடந்த 20ம் தேதி மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த தென்காசி மாவட்டம் மைப்பாறையை சேர்ந்த ராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32) தங்கம்மாள் (39) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முருகையா (57) என்பவரும், அவரைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த சதாம்உசேன் மனைவி முனீஸ்வரி (28) என்பவரும் உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து 21ம் தேதி குருசாமி (50) என்பவரது சலமும் மீட்கப்பட்டது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர கிசிச்சைபெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த முருகலட்சுமி (39) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT