மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திண்டுக்கல் வந்த 50 பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவர்களது ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன்பிறகு எந்த ரயில்போக்குவரத்தும் இல்லாததால் திண்டுக்கல் ரயில்நிலையம் மூடப்பட்டது.
மும்பையில் இருந்து நாகர்கோயில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை திண்டுக்கல் ரயில்நிலையம் வந்தடைந்தது.
இதில் 50 பயணிகள் திண்டுக்கல்லில் இறங்கினர். இவர்கள் அனைவருக்கும் ரயில்நிலையத்திலேயே மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் இறங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வீட்டு முகவரிகள், அலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஊரில் தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். மும்பை ரயிலில் வந்த பயணிகள் யாராவது ஒருவருக்கேனும் அறிகுறி ஏதாவது தென்பட்டால் உடனடியாக ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. காரணம் உடன் வந்த மற்ற பயணிகளை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை ரயில்நிர்வாகம் எடுத்துள்ளது.
முன்னதாக திண்டுக்கல் ரயில்நிலையத்தின் நுழைவு பகுதியில் புதிதாக குழாய் அமைக்கப்பட்டு அருகிலேயே சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் கைகழுவிட்டு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இருந்தது.
இருந்தபோதும் நேற்று வரை திண்டுக்கல் ரயில்நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் பலர் இந்த குழாயை பார்த்துக்கொண்டே சென்றனர் ஆனால் கைகளை கழுவிட்டு செல்லவில்லை. சிலர் தாங்களே முன்வந்து கைகளைக் கழுவிச்சென்றனர்.
இன்று காலை மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற பிறகு திண்டுக்கல் ரயில் நிலையம் மூடப்பட்டது.
ரயில்நிலைய முகப்பில் வைக்கபட்டுள்ள அறிவிப்பு பலகையில், ‘மார்ச் 31 வரை அனைத்து ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. எனவே ரயில்நிலையத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரி ஒருவர் கூறியவதாவது: மும்பை எக்ஸ்பிரஸில் வந்த பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியேற்றப்பட்டனர். அவர்களின் முகவரி, அலைபேசி பெற்றுக்கொண்டோம். வீட்டிற்கு சென்றபிறகு பாதிப்பு இருந்தால் தெரியப்படுத்த கூறியுள்ளோம். ஏனென்றால் பாதிக்கப்பட்டவருடன் பயணித்த மற்றவர்களை கண்காணிக்க இது உதவும்.
அரசு உத்தரவுப்படி மார்ச் 31 ம் தேதி வரை ரயில்நிலையம் மூடப்பட்டுள்ளது, என்றார்.