கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தலை வலியுறுத்தி நடத்தப்பட்ட சுய ஊரடங்கில் மருத்துப்பணியாளர்களைப் பாராட்ட மக்கள் பொது இடங்களில் கூடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் மார்ச் 22-ல் (நேற்று) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பிரதமர் பேசும்போது, சுய ஊரடங்கின் போது அன்று மாலை 5 மணிக்கு நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுத்துறையினர், தூய்மைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கைதட்டி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று பொதுமக்கள் நூறு சதவீதம் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். அரசு பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. மருத்துவமனை, பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், சாலைகள், தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
பங்குனி மாதத்தின் முதல் மூகூர்த்த நாளான நேற்று ஏராளமான திருமணங்களுக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆடம்பரமாக நடைபெற வேண்டிய திருமணங்கள் ஒரு சில உறவினர்கள் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடத்தப்பட்டன.
இந்தளவுக்கு சுய ஊரடங்கை முழுமையாக பின்பற்றி பொதுமக்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது பிரதமரின் வேண்டுகோளை மறந்து செயல்பட்டனர். மாலை 5 மணியானதுடன் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பொது வெளியில் கூடி நின்று கைகளை தட்டியும், சாப்பாடு தட்டுக்களை ஒன்றுடன் ஒன்று தட்டியும், மணியடித்தும், மேள, தாளம் இசைத்தும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பல இடங்களில் பொதுமக்கள் மகிழ்ச்சி பெருக்குடன் ஊர்வலமும் நடத்தினர்.
தனிமைப்படுத்தலை வலியுறுத்தியே சுய ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு மாறாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து திருமோகூரைச் சேர்ந்த ஜெ.செந்தில்வேல்முருகன் கூறுகையில், ‘கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தனிமைப்படுத்தல் அவசியம். அதற்காகவே சுய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதை சரியாக பின்பற்றிய பொதுமக்கள் மருத்துவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுவெளியில் கூடியது தவறானது.
பிரதமர் அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைகளை தட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சுய ஊரடங்கு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஆர்வம்மிகுதியால் மக்கள் பொது இடங்களில் கூடி நன்றி தெரிவித்துள்ளனர். இதை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.