இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் நாடே கரோனா வைரஸுக்கு எதிராக போராடிவரும் சூழலில் 11,12-ம் வகுப்பு தேர்வை நடத்தி என்ன சாதிக்கப்போகிறீர்கள், ஏன் இந்த பிடிவாதம் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை நடத்தியே தீருவோம் என பிடிவாதம் காட்டி வருகிறது. பிளஸ்டூ தேர்வு முடியும் நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு இன்றுதான் தொடங்கியது. அதையும் ரத்து செய்யாத நிலையில் அரசு பிடிவாதம் பிடித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி அத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பள்ளிக்கல்வித்துறை எதை சாதிக்கப்போகிறது என்பது தான் தெரியவில்லை.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள்.
இது கரோனா பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், கூட்டமாக தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தேர்வுகளில் அவர்களின் செயல்பாட்டை பாதித்து, எதிர்கால வாய்ப்புகளை சீரழிக்கும் ஆபத்தும் உள்ளது”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.