புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மார்ச் 23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 144 தடை விதிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கரோனா விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 31-ம் தேதி வரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியில் கரோனா அறிகுறியுடன் 515 சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்க மட்டும் அனுமதி. 'ஸ்விக்கி', 'சொமோட்டோ' உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது
மதுக்கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். வரும் 31-ம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருக்கும். இருசக்கர வாகனங்களில் யாரும் வெளியே செல்லக் கூடாது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் இன்று 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்