‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சாதாரண காய்ச்சலுக்கு மூலிகை மருந்தை சாப்பிட்ட நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் திராவிட செல்வம். இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தனக்கு ‘கரோனா’ வைரஸ் காய்சலாக இருக்கமோ என்ற அச்சத்தில் முத்துக்கருப்பன், வீட்டில் இருந்த மூலிகை மருந்தை எடுத்து மகனுக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை தானும் குடித்துவிட்டு மனைவி கவிதா, மற்றொரு மகன் விஷ்வாவுக்கும் கொடுத்துள்ளார். மூலிகை மருந்து குடித்த நான்கு பேருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் பீதியால் அப்பாவி மக்கள், மருத்துவ ஆலோசனையே இல்லாமல் நாட்டு மருந்து, மூலிகை மருந்து சாப்பிடுவது தற்போது அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை, ‘கரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க விழிப்புணர்வு செய்வதுடன், அப்பாவி அடித்தட்டு மக்கள் மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்துகள் சாப்பிடக்கூடாது என்பதை ஆங்காங்கே உள்ள அங்கன்வாடி பணியாளர்கள்,சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.